வவுனியா திருநாவற்குளம் பகுதியில் தொடர்ந்தும் வெள்ள நிலைமை ஏற்பட்டு வருவதனால் அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் கோரிக்கை விடுத்ததோடு, அவர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களையும் வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28.11) பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றபோதே இக் கோரிக்கையை அவர் முன் வைத்தார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா திருநாவற்குளத்தில் தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய தேவை இருக்கின்றது. அங்கு இருக்கின்ற வடிகால் முன்புறமாக அகலமாகவும், பின்புறமாக ஒடுக்கமாகவும் காணப்படுவதனால் வெள்ள நீர் விரைவாக வழிந்து ஓட முடியாமல் உள்ளது.
இதன் காரணமாகவே கிராமத்துக்குள் வெள்ள நீர் சென்று வீடுகளுக்குள்ளும் செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகிறது. இப்பகுதியில் சிலர் மதில்களை கட்டி வைத்திருக்கிறார்கள். எனவே இவற்றை ஒழுங்கமைத்து வெள்ள நீர் ஓடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது மாத்திரம் இன்றி சுமார் 20 வருடமாக மக்கள் இங்கு வசிக்கிறார்கள். எனினும் அவர்களுக்கான காணிக்கான எந்தவித ஆவணங்களும் இதுவரை கிடைக்கவில்லை.
இதன் காரணமாக அவர்கள் வீடுகளுக்கு கூட காப்பீடு செய்ய முடியாத நிலைமையில் வெள்ள அபாயத்துக்குள் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கான காணி ஆவணங்களை வழங்குவதற்கு விரைந்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் (காணி), குறித்த பகுதியில் உள்ள குளம் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக அவர்களுக்கு காணிக்கான ஆவணங்களை நடமாடும் சேவை ஊடாக விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என தெரிவித்தார்.