கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதற்கு பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் இலங்கை மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிக்குமார்கள் மற்றும் பொதுபல சேனாவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இலங்கையின் அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியத் தூதரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.
உயர் கல்வி அமைச்சு நிராகரிப்பு-
பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அதிபர்களுக்கும் வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சியை நிறுத்துமாறு முன்வைக்கப்படும் கோரிக்கை சாதாரணமான கோரிக்கை அல்லவென உயர் கல்வி பிரதி அமைச்சர் நந்தமிந்ர ஏகநாயக தெரிவித்துள்ளார்.
ரண்தம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி பாடசாலையில் இராணுவத்திடம் பயிற்சி பெற்று வந்த அதிபர் ஒருவர் நேற்று திடீர் என மரணமானார். இந் நிலையில், இது தொடர்பில் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், இந்த தலைமைத்துவ பயிற்சியை உடன் நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அதிபர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சிகளுக்கு எதிராக பொதுமக்கள் குரல்கொடுக்க வேண்டும் என அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் சஞ்சீவ பண்டார நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறாயினும் தலைமைத்துவ பயிற்சியை இடைநிறுத்த விடுக்கப்படும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று அல்லவென உயர் கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக குறிப்பிட்டுள்ளார்.
ஷரீஆ சட்டம் தொடர்பில் தெளிவுவேண்டுமென சட்டமா அதிபர் கோரிக்கை-
தமிழ் பேச முடியாததையிட்டு வெட்கமடைகின்றேன் என சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். எனக்கு ஆங்கிலம் மற்றும் சிங்களம் சரளமாக பேச முடியும். எனினும் தமிழ் பேச விருப்பம். ஆனால் சரளாமாக பேச முடியாது என தமிழ் உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளார்.
நீதியரசர் சீ.ஜீ.விரமந்திரியினால் எழுத்தப்பட்ட இஸ்லாமிய சட்டவியல் – ஒரு சர்வதேச பார்வை எனும் நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு இன்று திங்கட்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் மாணவனாக இருந்த போது தமிழ் கற்க முயற்சித்தேன். எனினும் பொருளாதார கஷ்டம் காரணமாக முடியவில்லை. இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு கட்டாயம் தேவை.
மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம் நாடுகளில் பயன்படுத்தப்படும் ஷரீஆ சட்டம் தொடர்பில் எமக்கு தெளிவு வேண்டும் இந்த தெளிவின்றியே எமது நாட்டிலிருந்து மக்களை தொழிலுக்காக அங்கு ஏற்றுமதி செய்கின்றோம். இதனால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றோம்.
இதனால் அந்த நாடுகளிலுள்ள சட்டங்கள் தொடர்பில் எமக்கு தெளிவு வேண்டும் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளிடம் தெரிவித்துள்ளேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.