வவுனியாவில் இரு மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மல்லாவி இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று (08.08) தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்கிழமை வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை காணவில்லை என அதன் உரிமையாளர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகார் ஜெயக்கொடி வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்கா (37348), திலீபன் (61461), பொலிஸ் கொன்தாபிள்களான உபாலி (10945), தயாளன் (9792), ரணில் (81010) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது மல்லாவியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவனை சந்தேகத்தில் கைது செய்திருந்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கடந்த யூன் மாதம் 29 ஆம் திகதி வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகில் விடப்பட்ட நிலையில் காணமல்போன மோட்டார் சைக்கிளும் மல்லாவியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இரு மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.