கர்நாடகாவில்..
4 வயது மகனை கொலை செய்த பெண் சிஇஓ அதிகாரி சுசனா சேத் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து முக்கியமான ஆதாரம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சுசனா சேத்(Suchana Seth, 39) என்ற பெண் சிஇஓ அதிகாரி சமீபத்தில் கோவாவில் கைது செய்யப்பட்டார்.
சனிக்கிழமை கோவாவில் உள்ள தனியார் ஹோட்டல் அறைக்கு தன் 4 வயது மகனுடன் சென்ற சுசனா சேத், இரு தினங்களுக்கு பிறகு ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு சென்றுள்ளார். ஆனால் அவருடன் அவரது 4 வயது மகன் செல்லவில்லை என்பதால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொலிஸார் சுசனா சேத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், அவர் வைத்து இருந்த சூட்கேஸில் 4 வயது மகன் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுசனா சேத் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் கொலை விசாரணை நடத்தி வரும் நிலையில், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தை தலையணையிலோ அல்லது துணியிலோ அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆனால் குழந்தையின் கழுத்தை நெரித்ததற்கான காயங்களோ அல்லது குழந்தை போராடியதற்கான அடையாளங்களோ உடலில் இல்லை என்றும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சுசனா தங்கிருந்த ஹோட்டல் அறையை சோதனையிட்ட பொலிஸார், அங்கு இருந்த 2 காலியான இருமல் பாட்டில்களை கண்டெடுத்துள்ளனர். எனவே இருமல் கொடுத்து குழந்தை மயங்கியதும் கழுத்தை நெரித்து சுசனா கொன்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சுசனா தங்கியிருந்த அறையில் இருந்து ஹோட்டல் ஊழியர்கள் ரத்தக்கறையுடன் டவல் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டை சேர்ந்த தன் கணவர் வெங்கட்ராமன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்த சுசனா சேத், கணவனை பழிவாங்கும் விதமாக தனது 4 வயது மகனை கொலை செய்து உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.