பல்கலைக்கழக மாணவர்களின் மனநிலையை பரிசோதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு..!

590

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க முன்னதாக அந்த மாணவர்களை மனநிலை தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்த அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு அண்மையில் கருத்துத் தெரிவித்த இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி ஷானிக்கா ஹிரும்புரேகம, மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவதன் காரணமாகவே பல்கலைக்கழகங்களுக்குள் மோதல்கள் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஆனால் அரசாங்கம் மாணவர்களின் சுதந்திரத்தை முடக்க முயற்சிப்பதன் காரணமாகவே பல்கலைக்கழகங்களுக்குள் மோதல்கள் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.

மாணவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் நோக்குடனேயே அரசாங்கம் இவ்வகையான திட்டங்களைக் கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.



பல்கலைக்கழகங்களில் வசதிகளும் வளங்களும் குறைவாக இருக்கும் நிலையில், அவற்றுக்கு எதிராக மாணவர்கள் போராட முன்வரும்போது அந்தப் போராட்ட உணர்வுகளை நசுக்குவதற்காகவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஜோசப் ஸ்டாலின் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் உயர்கல்வி அமைச்சர் கல்வித்துறையை தனியார் மயப்படுத்துவதில் மட்டுமே அக்கறை செலுத்துவதாகவும் அதற்கு எதிரான போராட்டங்களை அரசு நசுக்கப்பார்ப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் கூறுகிறது.

இப்படியான யோசனைகளை முன்வைக்கும் அதிகாரிகளின் மனநிலையையே சோதிக்க வேண்டும் என்றும் மாணவர்களின் மனநிலையை பரிசோதிக்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

(BBC)