யாழ். மாவட்டத்தில் ஒரு குடைக்குள் திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஜோடியாக இருப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடந்த சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
விவாகரத்துப் பெறாமல் இரண்டாவது திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டால் அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் ஓடிச் சென்ற காதலர்களைப் பிடித்து வருமாறு பொலிஸார் முறைப்பாட்டாளர்களிடமே தெரிவிக்கின்றனர் என்றும் பிரதேச சபை ஒன்றின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அங்கு சுட்டிக் காட்டினார்.
இதன்போது 18 வயதுக்கு மேற்பட்ட ஆணும் பெண்ணும் விரும்பிச் சென்றால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
“கொழும்பு காலிமுகத்திடலில் (கோல்பேஸ்) ஒரு குடைக்குள் ஆணும், பெண்ணும் இருந்தால் பிரச்சினையில்லை. இங்கு அப்படி இருக்க முடியாது. அது தென்னிலங்கை கலாசாரம். இது வடபகுதி கலாசாரம். இதனைப் பாதுகாக்க வேண்டும்´´ என்று கூட்டத்தில் கலந்து கொண்டோர் குறிப்பிட்டனர்.