இலங்கையில் புத்தளம் மாவட்டத்தில் அரச அதிகாரி ஒருவர் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அரசாங்க பணியாளர்கள் கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.
உதவி அரசாங்க அதிபர் மாலிக் என்பவரும் அவரது வாகன ஓட்டுனரும் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தே இந்த ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பில் தான் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒருவரை பொலிஸார் கைது செய்திருப்பதாக தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி மாலிக் தெரிவித்தார்.
தனது உடல்நிலை தேறி வருவதாகவும், தனது ஓட்டுனரின் நிலைமையே மோசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
எவரும் தன்னை தாக்கியதற்கான காரணம் எதனையும் கூறவில்லை என்று கூறிய மாலிக் அவர்களிடம், யானைகள் பிரச்சினை தொடர்பில் மக்கள் ஆத்திரமடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா என்று கேட்டபோது, அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் ஒரு பிரதேச செயலர் என்ற வகையில் தன்னால் அந்த விடயத்தில் செய்யக் கூடியவை மிகவும் குறைவே என்றும் அரசாங்க உயர்மட்டத்தில் ஒரு முடிவு எடுத்து செய்யப்பட வேண்டிய விடயங்களே அதிகம் இருப்பதாகவும் கூறினார்.
யானைகள் – மனிதன் முரண்பாடு என்பது இலங்கையில் அதிகரித்து வருகின்ற ஒரு பிரச்சினையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.