வடமேல் மாகாணத்தில் வில்பத்து சரணாலயத்தை ஒட்டிய புத்தளம் மாவட்டத்தில், குருநாகல் வீதியில் ஆனமடுவ, கல்லடி பகுதியில் நேற்று இரவு யானை தாக்கி உயிரிழந்த ஒருவரின் சடலத்தை வீதியில் வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமது பிரதேசத்தில் யானைகள் பொதுமக்களின் குடிமனைப் பிரதேசங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்துவருவதாகவும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் அரசாங்கத் தரப்பில் அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டனர்.
இதன்போது நிலைமையை கேட்டறியச்சென்ற பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவி அரசாங்க அதிபர் மொஹமட் மாலிக்கையும் அவரது வாகன ஓட்டுநரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்.
யானை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரக்தியடைந்திருந்த காரணத்தினால், அங்கு சென்ற அரசாங்க அதிகாரியான தன்மீது தாக்குதல் நடத்தியதாக உதவி அரசாங்க அதிபர் மலிக் கூறினார்.
அரசாங்கம் கடந்த காலங்களில் பல இடங்களில் யானைகளைத் தடுக்க மின்சார வேலிகளை அமைத்திருந்தாலும் மின்சார வேலிகள் இல்லாத இடங்களினூடாக குடிமனைகளுக்குள் புகுந்துவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய சம்பவத்திற்கு பின்னர், மற்ற இடங்களிலும் மின்சார வேலி அமைக்கும் பணிகளை வனவிலங்குத் துறை அதிகாரிகள் விரைவுபடுத்துவார்கள் என்று தன்னிடம் கூறியிருப்பதாகவும் புத்தளம் உதவி அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.
இந்தப் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் யானை தாக்கி 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதே பிரதேசத்தில் கருவெலகஸ்வெவ என்ற இடத்தில் ஒன்றரை மாதங்களுக்கு முன்னரும் ஒருவர் யானை அடித்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
(BBC)