இந்தியாவில் மும்பை நகரின் புறநகர்ப்பகுதியொன்றில் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் பலர் இடிபாடுகளுக்குள்ளே சிக்கிக்கொண்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
மும்பை நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில், தானே மாவட்டத்தில் அமைந்திருந்த மூன்று மாடி வீட்டுமனைக் கட்டிடமே இன்று அதிகாலை இடிந்துவிழுந்துள்ளது.
கட்டிடம் இடிந்தமைக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பொதுவாக இந்த நகரங்களில் அமைந்துள்ள கட்டிடங்களில் மோசமான கட்டுமான குறைபாடுகள் காணப்படுவதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தானே மாவட்டத்தில் இதற்கு முன்னரும் கடந்த ஏப்ரல் மற்றொரு கட்டிடம் இடிந்துவிழுந்ததில் 74 பேர் பலியானார்கள்.
இம்மாதத்தின் ஆரம்பத்திலும் மும்பை நகரில் 5மாடிக் கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இன்று காலை இடிந்துவிழுந்த கட்டிடத்தில் 9 குடும்பங்களின் வீட்டுமனைகள் அமைந்துள்ளன. பலரும் தூக்கத்தில் இருந்தபோது கட்டிடம் இடிந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் பருவமழையால் இந்தப் பழைய கட்டிடம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.