வவுனியா எட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்து சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் சித்திரவதை தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின்பேரில் 24 வயதுடைய கோணேஸ்வரன் காங்கேசன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
எட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தின் நிர்வாகியாகிய கல்யாண திஸ்ஸ தேரோவின் உதவியாளராக அந்த இல்லத்தில் இவர் பணியாற்றி வந்துள்ளார். வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, நீதவான் இவரை இரண்டு வாரம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியான பௌத்த மதகுரு வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மற்றுமொரு சிறுவன் மீது சித்திரவதை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடமும், பொலிசாரிடமும் முறையிடப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, இந்த சிறுவர் இல்லத்தில் இருந்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த சிறுவர்களில் 19 பேர் வவுனியா சிறுவர் நன்னடத்தைப் பிரிவினரிடம் நீதிமன்றத்தினால் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் முல்லைத்தீவில் உள்ள அரச அனுமதி பெற்ற சிறுவர் இல்லம் ஒன்றில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த சிறுவர்களில் 8 பேர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அவர்களுடைய பெற்றோரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த சிறுவர்கள் பாடசாலை சென்று கல்வி கற்பதற்கு வசதியாக சைக்கிள்கள் மற்றும் புத்தகங்கள், உபகரணங்கள் என்பனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்டிருக்கின்றது.