மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ராஜ்குமாரை (29) அவரது காதல் மனைவி வித்யா (27), கூலிப்படை உதவியுடன் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட ராஜ்குமார் – வித்யா தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே வித்யாவுக்கு பெங்களூரில் பணியாற்றும் மணிகண்டனுடன் (28) பழக்கம் ஏற்பட்டது.
இவர்களது கள்ளக் காதலை கண்டித்த ராஜ்குமாரை கூலிப்படை வைத்து கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். அதன்படி இன்று காலை வீட்டுக்குள் புகுந்த 4 கூலிப்படையினர், ராஜ்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
கொலை செய்த கொள்ளையர்கள் வாகனச் சோதனை சாவடியில் காவல்துறையிடம் சிக்கினர். சட்டையில் ரத்தக் கரை இருந்ததை அடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கொலை செய்து விட்டு வந்தது தெரிய வந்தது.
இதற்கிடையே, நகைக்காக தனது கணவரை கொள்ளையர்கள் கொன்றுவிட்டதாக வீட்டில் ராஜ்குமாரின் உடல் அருகே வித்யா அழுது கொண்டிருந்தார். அப்போது, குற்றவாளிகளோடு காவல்துறையினர் வீட்டுக்கு வந்து, வித்யாவிடம் விசாரணை நடத்தி, அவரையும் கைது செய்தனர். தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனர்.
தந்தையும் கொலை செய்யப்பட்டு, தாயும் கைதான நிலையில், குழந்தையின் நிலை பார்ப்போரை கலங்க வைத்தது.