கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு விமானத்தில், நேற்று துப்புரவு பணியாளர்கள் துப்புரவு செய்துகொண்டிருந்தனர். அப்போது, கழிவறையில் 2 பைகள் கிடந்தன.
அவற்றில் 24 தங்க கட்டிகள் இருந்தன. அவை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
தலா ஒரு கிலோ எடை கொண்ட இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.7 கோடி இருக்கும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு யாரும் உரிமை கோரவில்லை.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த சரக்கு விமானம், பாட்னாவிற்கு சென்று வந்தபிறகு கொல்கத்தாவில் நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக சர்வதேச வழித்தடங்களில் சென்றது.
எனவே, இந்த தங்கம் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்கும் வகையில், இறக்குமதி வரி இந்த ஆண்டு மட்டும் 3 முறை உயர்த்தப்பட்ட பிறகு இந்த கடத்தல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.