இந்தியாவின் 53 சதவீத வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால் சுமார் 60 கோடி பேர் திறந்தவெளியைப் பயன்படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
முதல்முறையாக ஐ.நா. உலக கழிவறை தினமாகக் கடைபிடிக்கப்பட்ட செவ்வாய்க்கிழமை, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் 250 கோடி பேருக்கு போதிய கழிப்பறை வசதிகள் இல்லை.
100 கோடி பேர், திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் இந்தியர்கள் மட்டும் 60 கோடி பேர்´ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குழந்தைகளின் மூளைத் திறனில், கழிவறைப் பழக்கத்தின் தாக்கம்´ என்ற கட்டுரையின் ஆசிரியரான டீன் ஸ்பியர்ஸ் தெரிவிக்கையில்,
“இந்தியாவில் கழிப்பிட விழிப்புணர்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 வயதுக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் மற்ற பகுதி குழந்தைகளைவிட எண்களையும், எழுத்துக்களையும் கிரகிக்கும் திறனை கூடுதலாகப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், அரசின் அந்தத் திட்டம், சுகாதாரத்துக்கு மட்டுமின்றி குழந்தைகளின் அறிவுத் திறன் வளர்ச்சிக்கும் பயன்படும் என்பது நிரூபணமாகியுள்ளது.
திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் வழக்கம், வளரும் நாடுகளின் மனித வளத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது´ என்று கூறினார்.
உலக வங்கியின் குடிநீர் மற்றும் பொது சுகாதாரத் திட்ட அமைப்பின் மேலாளர் ஜேயாங் சோ கூறுகையில், “கழிப்பிட வசதிகள் இல்லையென்றால், அது பொது சுகாதாரத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும்´ என்று தெரிவித்தார்.
மனிதக் கழிவுகளில் உள்ள கிருமிகளால் தாக்கப்படும் குழந்தைகள், மற்ற குழந்தைகளைவிட உயரம் குறைவாக இருப்பதாக, இந்த ஆண்டு வெளியான உலக வங்கியின் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.