ஜனாதிபதியின் கருத்தை புலம்பெயர் சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும் – பிரபா கணேசன்..!

397

prabaஅண்மையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் புலம் பெயர்ந்த சமூகத்தினரின் கருத்துகளை செவிமடுக்க தான் தயாராக இருக்கின்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமையை புலம்பெயர்ந்த சமூகம் தமது கவனத்தில் எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனாதிபதி ஐந்து விடயங்களை முன்வைத்துள்ளார். முதலாவது புலம்பெயர்ந்த சமூகத்தின் கருத்துகளை தான் செவிமடுக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இரண்டாவது தமது கருத்துக்களையும் புலம்பெயர்ந்த சமூகம் செவிமடுக்க வேண்டும் என்றார்.



மூன்றாவது புலம்பெயர் சமூகம் இலங்கைக்கு வந்து நிலைமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

நான்காவது நாட்டை ஒரு போதும் இரண்டாக பிரிப்பதற்கு இடங்கொடுக்க மாட்டேன் என்றார்.

ஐந்தாவது போர் குற்றங்கள் விசாரனைக்குட்படுத்தப்பட்டு யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த ஐந்து விடயங்களையும் புலம் பெயர்ந்துள்ள சமூகம் கவனத்திற்கொள்ள வேண்டும். அவர்கள் மட்டுமின்றி தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதனைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

எவ்வாறாயினும் நாட்டை இரண்டாக பிரிப்பதற்கு நாட்டில் வாழும் தமிழர்களோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினரோ விரும்பவில்லை என்பது உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வினை காணவே புலம்பெயர்ந்த சமூகம் விரும்புகின்றது என நினைக்கின்றேன்.

அதே நேரம் போர் குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற கூற்றை முழுவதுமாக நம்புவதற்கு இல்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே இந்த அரசாங்கம் இன்னும் அமுல்படுத்தவில்லை. அப்படியிருக்கும் பொழுது போர்குற்றங்கள் பின்னணியில் தெரிவித்திருக்கும் கருத்து ஒரு போதும் நடைபெறப் போவதில்லை.

ஆனாலும் கூட புலம்பெயர்ந்த தமிழர்களை ஒரு தரப்பினராக ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இது புலம் பெயர்ந்த சமூகத்தின் சக்தியை எடுத்துக் காட்டுகிறது. இதனை பிரயோகித்து புலம் பெயர்ந்த சமூகம் ஒரு கட்டமைப்புக்குள் வந்து இலங்கை அரசுடனான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தனது நிலைப்பாடுகளை அடிக்கடி இலங்கை அரசாங்கம் மாற்றிக் கொள்வதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். அதற்காக அனைத்து சந்தர்ப்பங்களையும் நாம் உதறிவிட்டு நின்றால் இன்னும் பல தலைமுறைக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

வெறுமனே யுத்தத்தில் வென்ற அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளில் மட்டும் நாம் செயற்படுவோமேயானால் ஒரு போதும் எமது மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியாது. என்று பெரும்பான்மை மக்களுக்கு இந்த அரசாங்கம் தேவையில்லை என்று தோன்றுகிறதோ அன்றுதான் அரசாங்க மாற்றம் ஏற்படப் போகின்றது.

அதுவரை நாம் எமது பிரச்சினைக்கு தீர்வு காணாமல் காத்திருப்போமானால் அது எமது எதிர்காலத்திற்கு உகந்ததல்ல. ஆகவே இன்றைய நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்னெடுக்க வேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் புலம் பெயர்ந்தவர்களும் சாணக்கியமான முறையில் செயல்பட வேண்டும்.