ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பல் இந்திய கடற்படையுடன் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் விக்ரமாதித்யா போர்க் கப்பல் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
2004-ம் ஆண்டு இந்தக் கப்பல் கட்டும் பணி துவங்கியது. சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, கப்பல் கட்டும் பணி மிகவும் தாமதமாக நடந்து வந்தது. இதனால் கப்பல் கட்டுவதற்கான செலவும் அதிகரித்தது. இதுதொடர்பாக, இரு நாட்டு உயரதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில், இந்தக் கப்பல் கட்டும் பணி 9 ஆண்டுகள் தாமதமாக சமீபத்தில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, இந்தக் கப்பல் இந்திய கடற்படையுடன் நாளையதினம் சேர்க்கப்பட உள்ளது.
ரஷ்யாவின் செவ்மாஸ் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறும் இவ் விழாவிற்கு ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி தலைமை வகிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக அந்தோனி இன்று ரஷ்யா செல்கிறார்.
இந்தக் கப்பலின் மொத்த எடை 44,500 டன்கள். 284 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில் நீர்மூழ்கிக் கப்பல்களை தேடிச் சென்று தாக்கி அழிக்கக் கூடிய 28 ஏவுகணைகள் உள்ளன.
மிக்-29 கே ரக விமானங்களை தாக்கி செல்லும் திறன் படைத்த இந்தக் கப்பலில், போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கப்பலால், தன்னை சுற்றியுள்ள 700 கடல் மைல்கள் தொலைவுக்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியும். இந்தக் கண்காணிப்பை மேற்கொள்வதற்கு உதவியாக இந்தக் கப்பல் ஹெலிகாப்டர்களை சுமந்துச் செல்லும்.
இந்தக் கப்பல் 1,600-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு இயங்க உள்ளது. பணியாளர்களுக்காக மாதந்தோறும் ஒரு லட்சம் முட்டைகள், 20,000 லிட்டர் பால், 16 டன் அரிசி ஆகியவை தேவைப்படும். “மிதக்கும் நகரமாக’த் திகழும் இந்தக் கப்பலில் ஒரே சமயத்தில் 7,000 முதல் 13,000 கடல் மைல்கள் பயணம் செய்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியும்.